கொரோனா பரவல் அதிகரிப்பால் ரஷியா, பிரான்ஸ், போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கண்டத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பரவ தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதால் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
3 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததால் பெரும்பாலான நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதன்பின் கொரோனா 2-வது அலை ஏற்பட்டதால் சில நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கின.
இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தும் பணி நடந்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா பரவியது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதேபோல் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவியது. பிரான்ஸ், இத்தாலி,ரஷியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்தன. இதனால் மீண்டும் வேகமாக பரவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
பிரான்ஸ் நாட்டில் 15 நகரங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரிசில் அத்தியாவசியம் இல்லாத கடைகள் ஓரு மாதத்துக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
போலந்து நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அடுத்த மூன்று வாரங்களுக்கு கடைகள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் உக்ரைன் நாட்டு தலைநகர் கீங்லில் அமல்படுத்தப்பட்டுள்ளன. அங்கு கடைகள் மூடப்பட்டுள்ளன. ரஷியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் அங்கும் புதிதாக ஊரடங்கு கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் கடந்த வாரம் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 சதவீதம் உயர்ந்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.