சின்னசேலம் அடுத்த வடக்கநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன் மகன் பிரகாஷ்ராஜ்(வயது 22). இவர் கச்சிராயப்பாளையம்-சின்னசேலம் சாலையில் நமச்சிவாயபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார்.
வழக்கம்போல நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற பிரகாஷ்ராஜ் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில்வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி கூறினார்.
பெட்ரோல்
இதையடுத்து பெட்ரோல் போடுவதற்கு எந்திரத்தில் இருந்த குழாய் பம்பை கையில் எடுக்க பிரகாஷ்ராஜ் திரும்பியபோது மர்ம நபர்களில் ஒருவன் தன்னிடம் இருந்த ஹெல்மட்டால் அவரது பின்பக்க தலையில் தாக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பிரகாஷ்ராஜ் கையில் வைத்திருந்த ரூ.72 ஆயிரத்துடன் பணப்பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த நிலையில் படுகாயம் அடைந்த பிரகாஷ்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்னசேலத்தில் உள்ள தனியாா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றார். பெட்ரோல் பங்கில் ஊழியரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நமச்சிவாயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.