இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவில் பக்தர்கள் அலகு போட்டுக்கொண்டும், காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் அன்றைய தினம் கொளஞ்சியப்பர் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் எழுந்தருள, தீர்த்தவாரி நடைபெறும்.
பக்தர்கள் தங்களின் அனைத்து வித நியாயமான கோரிக்கைகளையும், எழுத்து மூலம் சுவாமியிடம் பிராது செலுத்தும் நடைமுறை இங்கு வழக்கத்தில் உள்ளது. அப்படி பிராது செலுத்திய நாளிலிருந்து 90 நாட்களுக்குள், அந்த கோரிக்கை முழுவதுமாக நிவர்த்திப் பெறுவதும், வேண்டுதல் பலித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்வதும் நடைமுறை வழக்கமாகும்.
இதற்கு சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு கோரிக்கை உள்ள ஊரின் தொலைவினை கணக்கிட்டு, கிலோமீட்டர் ஒன்றுக்கு இருபத்தைந்து பைசா கட்டணமாகவும், சம்மன் மற்றும் தமுக்கு பணமாக இருபது ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோன்று கோரிக்கை நிறைவேறியவர்கள், பிராது வாபஸ் கட்டணமாக ஐம்பது ரூபாய் செலுத்தி பிராதினை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். பிரார்த்தனையுடன் கூடிய இவ்வழிபாடு இவ்வாலயத்தின் பிரசித்திப் பெற்ற வழிபாடாகும்.