விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடுவதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்து விடுவோம் என்று தே.மு.தி.க.வினர் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.
கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க. கட்சியை உருவாக்கிய விஜயகாந்த் முதல் முறையாக விருத்தாசலம் தொகுதியில் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அப்போது அவர் 61,337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமி 47,560 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். அதன் பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 72,902 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார்.
இதனை தொடர்ந்து விருத்தாசலம் தொகுதியை தே.மு.தி.க.வினர் தங்களுக்கு பாதுகாப்பான தொகுதியாக கருதினர். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தே.மு.தி.க. வேட்பாளர் கணிசமான வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
இந்த தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு வாக்கு வங்கி உள்ளதால் பிரேமலதா போட்டியிடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. தற்போது விலகி உள்ளது. எனவே, இந்த தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
அ.ம.மு.க. சார்பில் விருத்தாசலம் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். இதற்கிடையில் நேற்று தே.மு.தி.க- அ.ம.மு.க. இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் இந்த தொகுதியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டார்.
விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் கட்சி பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.
பிரேமலதா போட்டியிடுவதால் எப்படியும் வெற்றிக்கனியை பறித்து விடுவோம் என்று தே.மு.தி.க.வினர் தேர்தல் பணியில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.