கூடலூரில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வாகனங்களில் தொகுதி முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்திலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலரும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர். மேலும் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கூடலூர் சட்டமன்ற தொகுதியில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை தொகுதி தேர்தல் அலுவலரும், ஆர்.டி.ஓ.வுமான ராஜ்குமார் நேற்று காலை 11 மணிக்கு கூடலூரில் தொடங்கி வைத்தார். அப்போது புதிய பஸ் நிலையம் பகுதியில் நின்றிருந்த அரசு பஸ்கள் மற்றும் தனியார் ஆட்டோக்கள், ஜீப்புகள் உள்ளிட்ட வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஓட்டினார். தொடர்ந்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் தேர்தல் துணை தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர்கள் ராஜேந்திரன், தேவராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் வாகன டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கூடலூர் தொகுதி தேர்தல் அலுவலரும், ஆர்.டி.ஓ.வுமான ராஜ்குமார் கூறியதாவது:-
கூடலூர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 88 ஆயிரத்து 604 பேர் உள்ளனர். இதில் 92 ஆயிரத்து 108 ஆண்களும், 96 ஆயிரத்து 496 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது தவிர தொகுதி முழுவதும் 280 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. இதில் புதிதாக 58 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 49 இடங்கள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. கூடலூர் தொகுதியில் ஆதிவாசி மக்கள், தோட்ட மற்றும் கூலி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதனால் வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வாகனங்களில் தொகுதி முழுவதும் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.