கோடை மழை பெய்தால்தான் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஏரி மேட்டூர் அணை தண்ணீர் மூலம் நிரப்பப்படும். அதோடு பருவமழை காலத்தில் ஏரி நிரம்பி விடும்.
கடந்த ஆண்டு பெய்த புயல் மழை காரணமாக வீராணம் ஏரி 2 முறை நிரம்பி வழிந்தது. ஏரியில் இருந்து உபரிநீர் அப்படியே திறந்துவிடப்பட்டதால் வீராணம் ஏரியின் கரையோர கிராமங்கள் தனித்தீவாக மாறியது.
தற்போது வடவாறு வழியாகவும், செங்கால்ஓடை வழியாகவும் வரக்கூடிய தண்ணீர் வீராணம் ஏரிக்கு வரவில்லை. கொளுத்தும் கோடைவெயில் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு குட்டைபோல் காணப்படுகிறது.
எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறைக்கப்பட்டுள்ளது. ஏரியின் நீர்மட்டம் இன்றுகாலை 8 மணி அளவில் 39.95 அடியாக உள்ளது. பாசனத்துக்கு 24 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. நேற்று முன்தினம் சென்னைக்கு 41 கன நீர் அனுப்பப்பட்டது. அது இன்று காலை 25 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து 22 அடிவரை நீர்மட்டம் இருந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்பமுடியும். அதற்கு கீழ் நீர்மட்டம் குறைந்துவிட்டால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படும். எனவே கோடை மழை பெய்தால்தான் சென்னைக்கு குடிநீர் அனுப்ப ஏதுவாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.