கொரோனா பாதிப்பால் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட பஜ்ரங் பூனியா முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார்.
ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டி இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைபிரிவின் இறுதிப்போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் பஜ்ரங் பூனியா, மங்கோலியாவின் துல்கா துமுர் ஒசிரை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் 0-2 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கி இருந்த பஜ்ரங் பூனியா கடைசி 30 வினாடி இருக்கையில் எதிராளியை மடக்கி 2 புள்ளிகள் எடுத்ததுடன் தங்கப்பதக்கத்தையும் தனதாக்கினார்.
கொரோனா பாதிப்பால் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட பஜ்ரங் பூனியா முதல் போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு அசத்தி இருக்கிறார். அத்துடன் இந்த வெற்றியின் மூலம் பஜ்ரங் பூனியா 65 கிலோ எடைப்பிரிவில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்துள்ளார். ஏற்கனவே இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் (53 கிலோ) தங்கம் வென்று இருந்தார். இந்த போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்தை கைப்பற்றியது.