சண்டிகர் போக்குவரத்து போலீஸ் பிரியங்கா தனது கைக்குழந்தையுடன் பணியாற்றுவதை வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
சண்டிகர் போக்குவரத்து போலீசில் பிரியங்கா என்பவர் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. 6 மாத மகப்பேறு விடுமுறைக்கு பிறகு கடந்த 3-ந் தேதி அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
கடந்த 5-ந்தேதி பிரியங்கா தனது கைக்குழந்தையுடன் பணிக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பிரியங்கா கைக்குழந்தையுடன் நின்றபடியே பணியாற்றுவதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுதொடர்பாக பெண் போலீஸ் பிரியங்கா கூறியதாவது:-
எனது மகன் குறை மாதத்தில் பிறந்துள்ளான். எனது கணவரும் குடும்பத்தினரும் மகேந்திரகர் பகுதியில் வசித்து வருகிறார்கள். எனவே சண்டிகரில் எனது வீடு அருகே பணி ஒதுக்கும்படி கேட்டு இருந்தேன்.
2 நாட்கள் எனது வீட்டுக்கு அருகே பணி ஒதுக்கப்பட்டது. கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினேன். ஆனால் 3-வது நாளில் தொலைவில் உள்ள செக்டர்-29 பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி கொடுத்தனர்.
எனது குழந்தையை தனியாக விட்டுச்செல்ல முடியாது என்பதால் அவனை கையில் தூக்கிச் சென்றேன். தற்போதைக்கு எளிதான பணி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். இதை உயர் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சண்டிகர் போக்குவரத்து போலீஸ் அதிகாரி மனிஷா சவுத்ரி கூறும்போது, ‘குழந்தையை கையில் வைத்துக்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாது. பிரியங்கா குறித்த தகவல் கிடைத்தவுடன் அவரை எளிதான வேறு பணிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளேன்’ என்றார்.