ஊத்துக்கோட்டை அருகே கள்ளக்காதலிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வெங்கல் கிராமம் அடுத்த மென்னவேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது மனைவி பிரியங்கா (24). திருவாலங்காடு ஒன்றியம் நார்த்தவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவர் பொக்லைன் எந்திர வாகன ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், ராஜ்குமார், பிரியங்காவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பிரியங்காவுக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்து கொண்டு பழையனூர் கிராமத்தில் உள்ள தனது தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி பிரியங்கா வீட்டிலிருந்து வெளியேறினார்.
ஆனால் அவர் தோழி வீட்டிற்கு செல்லாமல் நார்த்தவாடா கிராமத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து கள்ளக்காதலன் ராஜ்குமாருடன் தங்கி ஒரு மாதத்திற்கு மேலாக தனிக்குடித்தனம் நடத்தியதாக தெரிகிறது.
இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன்பு கள்ளக்காதலன் ராஜ்குமார் பிரியங்கா இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதனால் பிரியங்கா அங்கிருந்து வெளியேறி வெங்கல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் ராஜ்குமார் அங்கு சென்று பிரியங்காவை சமரசப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் அவரை தீர்த்து கட்ட நினைத்த ராஜ்குமார், பிரியங்காவை அடித்து துன்புறுத்தி புடவையால் அவரின் கைகளை கட்டிப்போட்டு விஷம் கலந்த குளிர்பானத்தை அவரது வாயில் ஊற்றினார்.
இதனால் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து பிரியங்கா மயங்கி விழுந்தார். உடனே ராஜ்குமார் பிரியங்காவின் தோழி பவித்ராவிற்கு போன் செய்து, பிரியங்கா விஷம் குடித்து விட்டதாக கூறி அவரை வர வழைத்துள்ளார்.
பின்னர், இவர்கள் இருவரும் பிரியங்காவை மீட்டு, திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக செத்தார். இது குறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு சந்தேகத்தின் பேரில், ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தியதில், அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.