வேப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர் அருகே உள்ள சிறுகரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் ராஜசேகர் (வயது 14). வேப்பூர் அருகே அடரியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். ராஜசேகர் நேற்று முன்தினம் தனது பாட்டி வெள்ளையம்மாளுடன், அதே பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் கற்றுக்கொள்ள சென்றார். அப்போது வெள்ளையம்மாள், மாணவன் ராஜசேகரின் இடுப்பில் தனது புடவையால் கட்டி விட்டு நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார்.
இதில் திடீரென, அவனது இடுப்பில் கட்டி இருந்த புடவை அவிழ்ந்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராஜசேகர் நீரில் மூழ்கினான். இதனால் அதிர்ச்சியடைந்த வெள்ளையம்மாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ராஜசேகரை மீட்க முயன்றார். இருப்பினும் அவர்களால் முடியவில்லை. இதற்கிடையே இதுபற்றி அறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் ராஜசேகரை பிணமாக மீட்டனர்.
இதுபற்றி அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.