பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் விதிமுறை மீறலை கண்காணித்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 பறக்கும் படை, 9 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் ஒரு வீடியோ பதிவுகளை பார்வையிடும் குழு வீதம் மொத்தம் 126 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
அந்த குழுக்கள் வாகன சோதனை மேற்கொண்டு தேர்தல் விதிமுறை மீறலை கண்காணித்து, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி தாமோதரநகர் பகுதியில் கூட்டுறவு துறை அதிகாரி வீரபாகு தலைமையில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் ரூ. 67 லட்சத்து 96 ஆயிரம் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் என்பதும், தனது தொழிலுக்காக பணம் கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
எனினும் அதற்கு முறையான ஆவணம் இல்லாததால் உடனடியாக அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பறக்கும் படை சோதனையில் ரூ. 10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்படும் போது அது குறித்து வருமான வரித்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 67 லட்சத்து 96 ஆயிரம் குறித்து தூத்துக்குடி வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி அந்த பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது, அது யாருடையது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.