பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர்.
இந்நிலையில், ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு தேசிய விருது, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது குழுவில் ஜூரியாக இருந்த கங்கை அமரன், ஒத்த செருப்பு படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ஒத்த செருப்பு படத்திற்கு எந்த பிரிவில் விருது கொடுப்பதென்று தெரியாமல் ஜூரிக்கள் குழம்பிப் போயினர். ஏனெனில் அந்த படத்தில் கதை, வசனம், நடிப்பு, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் பார்த்திபனே செய்திருந்தார். அவை அனைத்துமே சிறப்பாக இருந்ததால் ஜூரிக்கள் அனைவரும் முடிவு செய்து, அப்படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவித்ததாக” கங்கை அமரன் தெரிவித்தார்.