எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை. மோடி என்ன சொன்னாலும் கேட்பார், குட்டி கரணமும் அடிப்பார் எனவும் நெல்லையில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.
நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வாக்கு சேகரித்த அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 4 நாட்களாக பிரசாரம் செய்து வருகிறேன். இதனால் தொண்டை வலி ஏற்பட்டு உள்ளது. எனினும் உங்களை காண வந்துள்ளேன்.
ஏற்கனவே கடந்த முறை இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறை தி.மு.க. ஆட்சி அமைய, மு.க.ஸ்டாலின் முதல்வராக 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தீர்கள். அதே போல் இந்த முறையும் வழங்க வேண்டும். அந்த தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை வீசியது. ஆனால் தமிழகத்தில் பெற்றது பூஜ்ஜியம் தான்.
பிரதமர் மோடி வெற்றி பெற்றதும் ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தை எடுக்க முடியாமல் தவித்தனர். அதில் ஆயிரம் பேர் பலியானார்கள்.
அது மட்டுமல்ல கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்றார். ஆனால் ஒழிக்க முடியவில்லை. புதிய இந்தியாவை படைப்போம் என்றார்கள். ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார்கள். ஆனால் அவர்கள் ஜி.எஸ்.டி. வரியை தான் போட்டு உள்ளார்கள்.
கொரோனா நிதி நெருக்கடியிலும் பிரதமர் பயணத்திற்காக ரூ.8 ஆயிரம் கோடியில் விமானம் வாங்கி உள்ளார். மழை, புயலின் போது தமிழகம் பாதிக்கப்பட்ட போது நிவாரணமாக ரூ.40 ஆயிரம் கோடி கேட்டோம். ஆனால் ஆயிரம் கோடி மட்டும் தான் கொடுத்துள்ளார்கள். ஆனால் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளார்கள்.
இப்படி மக்களின் வரி பணத்தை வீணடித்து வருகிறார்கள். இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தட்டி கேட்கவில்லை. நீங்கள் முதல்- அமைச்சராக ஜெயலலிதாவை தான் தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார் என்பது உங்களுக்கு தெரியும்.(அவ்வாறு கூறியபோது ஒரு படத்தை காட்டினார்).
இப்படி முதல்வரானவர் காலை பிடித்து பதவிக்கு வந்தவர் காலையே வாரிவிட்டார். எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இல்லை. மோடி என்ன சொன்னாலும் கேட்பார். குட்டி கரணமும் அடிப்பார்.
அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுவது பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடுவது போலதான். எனவே நமது மாநில உரிமையை விட்டு கொடுக்க கூடாது. தமிழகத்திற்கு மோடி எதுவும் செய்யவில்லை.
மாநில கல்வி உரிமையை அகற்றி நீட் தேர்வு கொண்டு வந்தார். கலைஞர் ஆட்சியில் நீட் தேர்வு இல்லாமல் கிராம புற மாணவ- மாணவிகள் உயர்கல்வி பயின்றார்கள். தற்போது நீட் பயிற்சிக்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டி உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும். புதிய கல்வி கொள்கை தற்போது வெளியிட்டுள்ளார்கள். அதில் அனைத்து பட்டப்படிப்பு களுக்கும் நீட் தேர்வு அவசியம் என்று கூறப்பட்டு உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் ரூ.400-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை இப்போது 1000-க்கு உயர்ந்து உள்ளது. எனவே சிலிண்டர் ரூ.100 குறைக்கவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும், மாதந்தோறும் பெண்கள் ரூ.1000 உதவித்தொகை பெறவும், கொரோனா உதவித்தொகையாக அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் பெறவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர். மிக பெரிய வெற்றியை தாருங்கள்.
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் 2 மாதத்தில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். மானூர் பகுதியில் அரசு கல்லூரி, தச்சநல்லூரில் அரசு மருத்துவமனை அமைத்து தருவோம். நெல்லை பகுதியில் தொழிற் சாலைகள் அமைத்து புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். எனவே தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.