கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மது கடைகள் அனைத்தும் கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது, வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தும் வருகின்றனர்.
இதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தியும், சந்தேக நபர்களின் வீடுகளை சோதனை நடத்தியும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சாராயம் விற்பனை குறைந்தபாடு இல்லை.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் கூரை கொட்டகையில் பெரிய பாத்திரம் ஒன்றில் சாராயத்தை ஊற்றி வைத்து விற்பனை செய்தார். இதை அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் சிலர் ரூ.500, ரூ.2,000 என பணத்தை வீசி எறிந்து விட்டு கேன், பாட்டில்களில் சாராயத்தை வாங்கி சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூகவலைத் தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் சாராயம் விற்ற பெண் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வடமாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மனைவி சித்ரா(வயது 46) என்பது தெரியவந்தது.
இதையடுத்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான போலீசார் வடமாம்பாக்கம் கிராமத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.அப்போது அங்கே கூரை கொட்டகையில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சித்ராவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் டிராக்டருடன் விற்னைக்காக 2 கேன்களில் வைத்திருந்த 200 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உளுந்தூர்பேட்டை பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்ததாக 13 பேர், சாராயம் விற்பனை செய்ததாக 7 பேர் என மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்ட, அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் மது பாட்டில்கள் மற்றும் 120 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.