கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.
பஞ்சாங்க நமஸ்காரம்:- இந்த வகையான வழிபாட்டு முறை பெண்களுக்கு உரித்தானது. இப்படி இறைவனை வணங்கும்போது, பெண்கள் தங்களுடைய பஞ்ச அங்கங்கள் (பஞ்சம்- ஐந்து, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படி விழுந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் தலை, இரண்டு முழங்கால்கள், இரண்டு பாத நுனிகள் பூமியில்படும் படி விழுந்து வணங்க வேண்டும். இப்படி வழிபாடு செய்வதால் இறைவனுடைய பூரண நல்லாசி கிடைக்கும்.
அஷ்டாங்க நமஸ்காரம்:- இந்த வகையில் இறைவனை வணங்குவது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இந்த வழிபாட்டு முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்-எட்டு, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படியாக விழுந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி ஆகிய எட்டு பகுதிகளும் தரையில் படும்படியாக படுத்துக் கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைவதாக நினைத்து வணங்க வேண்டும். இந்த வகை வழிபாட்டால், நம்முடைய வாழ்வில் உண்டான பாவங்கள் நீங்கி நமக்கு நற்கதி கிடைக்கும்.
உத்தம நமஸ்காரம்:- நம்முடைய கரங்களின் ஓடும் கைரேகையில் லட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதனை வேத ரேகைகள் என்றும் அழைப்பார்கள். அந்த வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களையும் இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பின் மையத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மனதில் இறைவனின் மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்கும்போது, அதை இறைவன் செவிசாய்த்துக் கேட்பான் என்பது ஐதீகம். இந்த முறைக்கு ‘உத்தம நமஸ்காரம்’ என்று பெயர்.