ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற அந்தாதூன் படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதினையும் வென்றது.
இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். நடிகை சிம்ரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை இயக்க முதலில் மோகன்ராஜா ஒப்பந்தமானார். பின்னர் தெலுங்கு படத்தில் பிசியானதால் அவர் விலகினார். இதையடுத்து ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் இயக்குனர் ஜெஜெ பிரெட்ரிக் இயக்க உள்ளதாக அறிவித்தனர்.
இந்நிலையில், இயக்குனர் ஜெஜெ பிரெட்ரிக்கும் அப்படத்தில் இருந்து விலகி உள்ளாராம். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தகன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, விரைவில் எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.