சங்கராபுரம் தொகுதியில் பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி உதவி பொறியாளர் அண்ணாதுரை தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு பிரபு ஆகியோரை கொண்ட பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.வி.பாளையம் கிராம சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சங்கராபுரம் தாலுகா, புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சரவணன் என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சரவணனிடம் இருந்து ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் அதை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத்காதர் உடன் இருந்தார்.