திருப்பூரில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதையடுத்து பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 24 பறக்கும் படையினர் முக்கிய இடங்களில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் வணிக வரித்துறை அலுவலர் முத்துதாஸ் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் ரூ.2லட்சத்து 32ஆயிரத்து 600 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் பிரபு என்பவரிடம் பணத்திற்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை கொடுத்து விட்டு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.