துணை ஆட்சியாளர் மறைந்ததையடுத்து 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என துபாய் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மந்திரியும், துபாய் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஷேக் ஹம்தான், கடந்த அக்டோபர் மாதம் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு ஆபரேசன் செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் மறைந்ததை அவரது சகோதரரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இன்று அறிவித்துள்ளார். ‘எனது சகோதரர், எனது ஆதரவாளர் மற்றும் எனது வாழ்நாள் நண்பனை இழந்துவிட்டேன்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துணை ஆட்சியாளர் மறைந்ததையடுத்து 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு, தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என துபாய் அறிவித்துள்ளது. மேலும், நாளை முதல் மூன்று நாட்களுக்கு அரசு அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹம்தான், 1971ம் ஆண்டு முதல் அமீரகத்தின் நிதி மந்திரியாகவும், 1995 முதல் துபாய் துணை ஆட்சியாளராகவும் செயலாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.