பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது. 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
இந்தநிலையில் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மாத பூஜையின் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைப்பார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூதபலி, உத்சவ பலியும், 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28-ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.
தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாத பூஜை மற்றும் விழா நாட்களில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.