நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர் வீ்ட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்வேலி 26-வது வட்டம் ராஜாஜி சாலையில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 60). இவர் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் போர்மேனாக பணியாற்றி வருகிறார். இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து ராஜேந்திரனை அவரது குடும்பத்தினர் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்த பின்னர் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டில் இருந்த பீரோவை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ரூ.1 லட்சம் மற்றும் பட்டுப்புடவைகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், தெர்மல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.