விளையாட்டுசெய்திகள்

நடராஜன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள்.. ஏன் அவர் டெஸ்ட் போட்டிக்குத் தேவை?! 

நெட் பெளலராக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்தவர் நடராஜன். ஒருநாள், டி 20 போட்டிகளில் ஜொலித்த நிலையில் மீண்டும் ஒரு பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக உமேஷ் யாதவ் டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேற அவருக்குப் பதிலாக மீதமிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் நடராஜன். நாளை நடக்கவிருக்கும் சிட்னி டெஸ்ட்டில் நடராஜன் ஆடும் லெவனில் களமிறக்கப்படுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

India-vs-Australia-test-match-what-challenge-awaits-for-Indian-pace-bowler-T-Natarajan

ஷமி இடத்தை சிராஜ் பிடித்துவிட்டார். இப்போது இருப்பது உமேஷ் யாதவ்வின் இடம் தான். இந்த இடத்துக்கு சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் என மூன்று பேர் போட்டியில் இருக்கின்றனர். அதிலும் சைனிக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறித்து தெரியாத நிலையில் ஷர்துல், நடராஜன் இருவருக்கே போட்டி. இந்தப் போட்டியில் ஷர்துல் முன்னணியில் இருக்கிறார். அதன் காரணம், ஷர்துலின் அனுபவம். நடராஜனை விட ஷர்துல் உள்நாட்டில் அதிகமான முதல்தரப் போட்டிகளிலும், ரஞ்சி போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். ரெட் பாலில் ஸ்விங் செய்வதிலும் ஷர்துல் நடராஜனை விட ஒரு படி மேல். இதனால் அவருக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.

 

image

 

ஒருவேளை நடராஜன் ஆடும் லெவனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பது கேள்விக்குறி எனப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இந்த சந்தேகத்தை முதலில் எழுப்பியவர் நடராஜனின் ஐபிஎல் சகாவும், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேனுமான டேவிட் வார்னர். டி20, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பிடித்தபோது அவரை பாராட்டிய வார்னர் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்தற்க்கும் வாழ்த்துக்களை சொன்னதோடு, “நட்டு நல்ல லைனில் சிறப்பாக பந்து வீசுபவர். இருப்பினும் அது டெஸ்ட் போட்டிகளில் எந்த அளவுக்கு எடுபடும். தொடர்ந்து அடுத்தடுத்து பந்து வீசும் போது ஒரே லைனை அவர் எப்படி கேரி செய்வார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் அதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லிவிட முடியாது. கடந்த போட்டியில் அசத்திய சிராஜை போல சிட்னி டெஸ்டுக்கான அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டால் அவரும் அறிமுக வீரராக களம் இறங்கி அசத்தலாம்” என்று சந்தேகத்தையும் தொடங்கி வைத்தார்.

image

இதே சந்தேகத்தை தற்போது மற்ற வீரர்களும் நடராஜனை நோக்கி வீச ஆரம்பித்து இருக்கின்றனர். ஷாட்டர் ஃபார்மட் ஆட்டங்களுக்கே உரித்தான ஸ்டைல் கொண்டது நடராஜனின் பௌலிங். யார்க்கர் மட்டுமே அவரின் பலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சில கட்டர்களையும் ஷாட் பிட்ச் டெலிவரிக்களையும் வீசி காண்பித்தார். இது மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் வேகப்பந்து வீச்சாளருக்கு போதுமானது கிடையாது. டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை சிவப்பு பந்துகளில் ஸ்விங் செய்ய வேண்டும். பேட்ஸ்மேன்கள் திணறும் லைனை கண்டுபிடித்து லைன் & லெந்தில் பந்துவீச வேண்டும். விக்கெட் விழும் வரை அதே லைன் & லெந்தில் பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும். அதிகமாக ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடிய நடராஜனால் இதை செய்ய முடியுமா என்பதே பல முன்னாள் வீரர்களின் கேள்வியாக இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் திவாகர் வாசு இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்துள்ள பேட்டியில், “இந்திய டெஸ்ட் அணியில் நடராஜன் இடம்பிடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. டி20, ஒரு நாள் ஃபார்மெட்டை போன்று டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மட்டிலும் நடராஜன் சாதிப்பாரா என்பதை என்னால் சொல்ல முடியாது. அவர் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நடராஜன் கடினமான உழைப்பாளி. மேலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர். அப்படியானவர் அணியின் பௌலிங் பயிற்சியாளர் பரத் அருணுடன் கைகோர்க்கும்போது, சீக்கிரமே பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

image

டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. யார்க்கர்களும் ஸ்லோயர் ஒன்களும் மட்டுமே நடராஜனை டெஸ்ட் ஆட வைத்துவிட முடியாது. டெஸ்ட் ஆட ஸ்விங் செய்ய வேண்டும். ஒரே லைனில் பந்தை வீச வேண்டும். பந்தை கட் செய்ய வேண்டும். நடராஜனிடம் ஸ்விங்கும் இல்லை, போதிய வேகமும் இல்லை. அதனால் அவரை ஒரு ஸ்ட்ரைக் பௌலராக நினைத்து அணியில் எடுக்க முடியாது. எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் திடீரென விக்கெட்டுகளை எடுத்து கொடுக்கும் பௌலராக அவரை அணிக்குள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. நடராஜன் தன்னுடைய ஆங்கிளையும், ஸ்விங்கையும் மேம்படுத்த இன்னும் அதிக உழைப்பைக் கொடுத்து கற்றுக்கொண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பௌலராக வருவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தமிழக ரஞ்சி அணியின் கேப்டன் பாபா அப்ராஜித் நடராஜன் தொடர்பாக தனது கருத்துக்களை கூறியுள்ளார். “4 வருடங்களாக நடராஜனுடன் விளையாடி வருகிறேன். எனது பார்வையில் நடராஜன் எளிதில் சோர்ந்து விடும் வீரர் கிடையாது. லாங் ஸ்பெல்களை அவரால் வீச முடியும். சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு வந்தாலும் பழைய வேகத்தில் மீண்டும் வீசும் திறன்கொண்டவர். துல்லியமாக பந்து வீசுவார் என்பதால் எப்போதெல்லாம் அணிக்கு விக்கெட் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் நடராஜனை அழைத்து தான் பௌலிங் செய்ய வைப்பேன்” என அப்ராஜித் நடராஜன் குறித்து கூறி இருக்கிறார்.

image

இவர்கள் இப்படி கூறினாலும், நடராஜன் அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறி காரணங்களை அடுக்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். ஜாகீர்கான், நெஹ்ரா, இர்பான் பதானுக்கு பின் இந்திய அணியில் இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படியாக ஆடவில்லை. ஐபிஎல் உள்ளிட்ட ஒரு சில ஆட்டங்களில் கலீல் அகமது சிறப்பாக செயல்பட்டாலும், அவரிடம் துல்லியத்தன்மை, பெரிய அளவில் வேகம் இல்லாதது போன்ற சிக்கல்கள் அவரை அணிக்குள் கொண்டுவர முடியவில்லை. போதாக்குறைக்கு குறுகிய காலகட்டத்தில் அவரை ஆஸ்திரேலியா கொண்டுவருவது என்பது இயலாத காரியம். மறுபுறம் பும்ரா, சிராஜ் என வலதுகை வேகப்பந்துவீச்சாளர்களே அணியில் இருக்கின்றனர். இவர்களுடன் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜனை கொண்டுவந்தால் பந்துவீச்சில் வேறுபாடு காட்ட வைக்க முடியும்.

பந்துவீச்சில் வேறுபாடு காட்டுவதற்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அவசியம். குறிப்பாக, இடதுகை பந்துவீச்சாளர்கள் ‘அரவுண்ட் ஸ்டிக்கில்’ இருந்து பந்துவீசும் போது, அதை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களை எளிதாக திணறடிக்க முடியும். அதை நடராஜன் கச்சிதாமாக செய்து முடிப்பார்.ஏனென்றால், ஐபிஎல் ஆட்டங்களைவிட, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடராஜன் பௌலிங் வேகத்தை அதிகரித்துள்ளோதோடு, துல்லியத்தன்மையையும் மேம்படுத்தியுள்ளார்.

image

இதேபோல் நடராஜனின் பேவரைட் யார்க்கர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை பதம் பார்க்கும். எனவே நடராஜன் அணியில் இருப்பது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கும். இந்த காரணங்களுக்காகவே கேப்டன் ரஹானே உமேஷ் இடத்துக்கு நடராஜனை டிக் அடித்துள்ளார். இதனால் நடராஜன் அணிக்கு தேர்வாகவே அதிக வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள்.

நடராஜன் மீது வைக்கப்படும் இந்த கருத்துக்கள் புறந்தள்ள முடியாதவை. சாதாரண குக்கிராமத்தில் இருந்து எத்தனையோ தடைகளை தாண்டி கிரிக்கெட் உலகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நடராஜன், இந்த சோதனைகளையும் தாண்டி ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டராகவும் ஜொலிக்க வேண்டும் என்பது நம் அனைவரின் விருப்பமும். அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles