குற்றம்செய்திகள்

வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் நூதன மோசடி: மும்பை கணவன்-மனைவி கைது ..

ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் நூதன மோசடி: மும்பை கணவன்-மனைவி கைது

                                                            கைது
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் உலகில் இருந்துகொண்டே இருப்பார்கள் என்பது எழுதப்படாத உண்மை. ஆன்லைன் வசதி வந்தபிறகு நாம் நினைத்துப் பார்க்காத அளவுக்கு மோசடி லீலைகள் அரங்கேற்றப்படுகின்றன. அதுபோன்ற ஒரு வித்தியாசமான பண மோசடி குறித்த புகார், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுக்கப்பட்டது.

இந்த மோசடி வலையில் சிக்கியவர் பெயர் மனீஷ்குப்தா. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அவர் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆன்லைனில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் இந்தி நடிகைகள் மற்றும் பெண் தொழிலதிபர்களுக்கு மெய்க்காப்பாளராக பணி செய்ய ஆட்கள் தேவைப்படுகிறார்கள். கைநிறைய சம்பளம் கொடுக்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் கூறியிருந்தனர். அந்த வேலைக்கு நான் விண்ணப்பித்தேன். அதற்கு முன் பணம் கட்ட வேண்டும் என்றும், அது பின்னர் திருப்பித்தரப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

நடிகைகளுக்கு மெய்க்காப்பாளர் வேலை என்றதாலும், கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்று ஆசைகாட்டியதாலும், அவர்கள் கேட்ட முன்பண தொகை ரூ.16½ லட்சத்தை நான் கொடுத்தேன். வேலையும் வாங்கி கொடுக்கவில்லை, நான் கொடுத்த முன்பண தொகையையும் திருப்பித்தராமல் ஏமாற்றி விட்டனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த மோசடியில் மும்பையைச் சேர்ந்த சினிமா புகைப்பட நிபுணர் தியான்கர் கஸ்நாவிஸ் (வயது 39) மற்றும் அவரது மனைவி யாசிம்கான் ரசூல் (38) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. மும்பை சென்ற தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தீவிர விசாரணைக்குப்பிறகு அவர்கள் கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Show More

Leave a Reply

Related Articles