ஆன்மீகம்

விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்…கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நஷ்டம்

விநாயகர் சதுர்த்திக்கு பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளதால், சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் கடுமையாக நஷ்டம் அடைந்துள்ளதால் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியன்று ஊர் பொது இடத்திலும், விநாயகர் கோவிலுக்கு முன்பும் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.பின்னர், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு, குளங்கள், அணைகள், கடலில் விஜர்சனம் செய்யப்படும்.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர், அய்யங்கோவில்பட்டு, சித்தலிங்கமடம், மடப்பட்டு, பேரங்கியூர், நீலமங்கலம், ஏமப்பேர், தச்சூர், போன்ற பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து ஆண்டுதோறும் விற்பனை செய்யப்படுகிறது.ஆண்டுதோறும், ரசாயனம் ஏதுமின்றி தண்ணீர் மாசு அடையாத வகையில் எளிதில் கரையக் கூடிய பேப்பர் கூழ், கிழங்கு மாவு, கல்லு மாவு, பசை மாவு போன்ற மூலப் பொருட்களை கொண்டு சிலைகள் தயாரிக்கப்படும்.

ஒரு அடி முதல் 20 அடி வரையிலான சிலைகள் பல்வேறு டிசைன்களில் விற்பனை செய்யப்படும். விநாயகர் சிலைகள் தயாரிப்பு தொழிலை நம்பி மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.இம்மாவட்டத்திலிருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் திருப்பூர், கோயம்புத்துார், உடுமலை, பொள்ளாச்சி, வால்பாறை, காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டர் மூலம் விற்பனை செய்யப்படும்.கடந்த சில ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவதால், சிலைகளும் அதிகளவில் தயாரிக்கப்பட்டது.

இதனால், விநாயகர் சதுர்த்தி தினத்திற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே சிலை தயாரிப்பு உரிமையாளர்கள், சிலைகள் வடிவமைப்பு பணிகள் ஈடுபடுவர். விநாயகர் சதுர்த்திக்கு ஒரு மாதத்திற்கு முன் ஆர்டர் பெற்று சிலைகள் விற்பனை செய்வது வழக்கம்.இந்தாண்டு வரும் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதித்ததால், சிலை தயாரிப்பாளர்கள் ஏமாற்றத்துடன் கடும் நஷ்டம் அடைந்தனர்.

இந்த ஆண்டு எப்படியும் கடந்த ஆண்டு நஷ்டத்தை சமாளித்து விடலாம் என எண்ணி சிலை தயாரிப்பாளர்கள் ஆயிரக்கணக்கான சிலைகளை வடிவமைத்து விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர்.இந்நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவினை எளிமையாக கொண்டாட வேண்டும்.

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக் கூடாது. வீட்டிலேயே சிறிய அளவிலான சிலை வைத்து வழிபட வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.இதனால், விநாயகர் சிலை தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். உற்பத்தி செய்த விநாயகர் சிலைகள் குடோன்களிலேயே தேக்கமடைந்துள்ளன.கடந்தாண்டைப் போல இந்த ஆண்டும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Show More

Leave a Reply

Related Articles