குற்றம்செய்திகள்

வங்கியில் ஏ.டி.எம். எந்திரம் கடத்தல்…

திருப்பூர் வங்கியில் ஏ.டி.எம். எந்திரம் கடத்தல்- கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படையினர் தீவிரம்

ஏ.டி.எம்.எந்திரம் கொள்ளை நடந்த பாங்க் ஆப் பரோடா வங்கி முன்பு பொதுமக்கள் குவிந்துள்ளதை படத்தில் காணலாம்.

 

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் பாங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. வங்கியையொட்டி ஏ.டி.எம்.மையமும் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை 4-30 மணியளவில் வங்கிக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் 4பேர் ஏ.டி.எம்.எந்திரத்தின் கதவை உடைத்ததுடன், பல லட்சம் பணம் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை அடியோடு பெயர்த்து எடுத்து கயிறு மூலம் கட்டி இழுத்து காரில் ஏற்றி கடத்தி சென்றனர். ஆட்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கிய ஊத்துக்குளி போலீசார் கொள்ளையர்கள் ஏ.டி.எம்.எந்திரத்தை கொள்ளையடித்து சென்ற காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்திய போது அந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் மூங்கில்பாளையம் பிரிவு அருகே காலி இடத்தில் நிற்பது தெரியவந்தது.

காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அந்த கார் பெருந்துறை அடுத்த நல்லிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், மின்சார வாரியத்திற்கு ஒப்பந்த முறையில் காரை பயன்படுத்தி வந்த நிலையில், அதனை கொள்ளையர்கள் கடத்தி சென்று ஏ.டி.எம். எந்திரம் கொள்ளைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஏ.டி.எம். எந்திரத்தையே கொள்ளையர்கள் தூக்கி சென்ற சம்பவம் போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் கள மிறங்கினர்.

திருப்பூர் மாவட்ட எஸ்.பி., திஷாமித்தல் உத்தரவின் பேரில் காங்கேயம் டி.எஸ்.பி. தனராசு தலைமையில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், வெள்ளக் கோவில் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

ஒரு தனிப்படையினர் வங்கியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு தனிப்படையினர் இதேப்போல் வேறு எங்காவது கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா? அதில் தொடர்புடையவர்கள் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்களா? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கொள்ளையர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் உள்ள பணத்தை எடுத்து விட்டு எந்திரத்தை திருப்பூர் மாவட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தூக்கி வீசி சென்றுள்ளனரா? என்பதை கண்டறிய கொள்ளையர்கள் சென்ற வழிப்பாதையில் ஹெலிகேமராவை பறக்க விட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

சைபர் க்ரைம் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பல கொள்ளை வழக்குகளில் வடமாநிலத்தவர்கள் சிக்கி வருவதால் வட மாநில கொள்ளையர்களின் கை வரிசையாக இருக்கலாமா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாங்க் ஆப் பரோடா வங்கியில் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளை போனசம்பவம் அறிந்ததும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் உள்ள தங்களது நகை, பணம் கொள்ளை போயிருக்குமோ? என்று எண்ணி வங்கியில் குவிந்தனர். வங்கி அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அப்போது பொதுமக்கள், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க வங்கியில் இரவு நேரம் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Show More

Leave a Reply

Related Articles