நமது மாவட்டம்உளுந்தூர்பேட்டை

மாணவி உடல் எரிந்த சிதையில் விழுந்து வாலிபர் தற்கொலை? போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் நித்யஸ்ரீ (வயது 19). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு என்று தனியாக செல்போன் இல்லாததால் ஆன்லைன் மூலம் பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கடந்த 31-ந்தேதி அவரது உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து உறவினர்கள் தீ மூட்டினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் மேட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் ராமு (20) என்பவர் திடீரென மாயமானார். இது குறித்து அவரது தந்தை திருநாவலூர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகன் ராமு கடந்த 31-ந்தேதி இரவு முதல் காணவில்லை என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் ராமுவின் நண்பர்கள் சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ராமு, தற்கொலை செய்து கொண்ட நித்யஸ்ரீயை ஏற்கனவே ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், அவர் திடீரென்று இறந்ததால் மனமுடைந்து தானும் தற்கொலை செய்து கொள்ள போவதாகக் கூறி கடந்த 31-ந்தேதி சுடுகாட்டு பகுதியில் சுற்றித்திரிந்ததாக அவருடைய நண்பர்கள் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நித்யஸ்ரீயின் உடல் எரிந்த சிதையில் விழுந்து ராமு விழுந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதையடுத்து உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் தடயவியல் நிபுணர் ராஜ் மற்றும் போலீசார் சுடுகாட்டுக்கு சென்று நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது அங்கு பாதி எரிந்த நிலையில் கிடந்த கை கடிகாரத்தை போலீசார் கைப்பற்றினர். அது ராமுவின் கை கடிகாரம் தான் என்று முருகன் போலீசில் உறுதிப்படுத்தினார். இதையடுத்து நித்யஸ்ரீ எரிக்கப்பட்ட இடத்தில் கிடந்த எலும்புகளை தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் முடிவு வந்தபிறகு தான், இறந்த மாணவி எரிந்த சிதையில் விழுந்து ராமு தற்கொலை செய்து கொண்டாரா? இல்லையா? என்பது பற்றிய விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் எனது மகனுக்கும், நித்யஸ்ரீக்கும் எந்த வித தொடர்பும் இல்லையென்று முருகன் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles