பொது மருத்துவம்மருத்துவம்

புகைப்பதை நிறுத்துவதால் என்ன நன்மைகள் தெரியுமா ?

உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை, உயிரிழப்புகளை  தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை ஒழிப்பு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. புகைபிடிப்பதை நிறுத்துகிறோம் என உறுதிமொழி ஏற்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா தன் கோரா தாண்டவத்தால் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில்,   “புகைபிடிப்பவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழப்பதற்கு 50 சதவிகித வாய்ப்புகள்  உள்ளது” என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஆதனோம் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவதே சிறந்தது எனக் கூறும் அவர், இதன்மூலம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இதய நோய்களை தவிர்க்க முடியும் என்று கூறுகிறார்.

புகைபிடிப்பதை நிறுத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. 

* புகைபிடிப்பதை நிறுத்திய 20 நிமிடத்தில் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராக இயங்க ஆரம்பிக்கிறது.

 * 12 மணி நேரத்தில் ரத்தத்தில் கார்பன் மோனாக்சைடு அளவு படிப்படியாக குறைந்து சீராகிறது.

*  2- 12 வாரங்களில் உடல் இயக்கம் சீராகிறது, நுரையீரல் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.

 * 1 – 9 மாதங்களில்  இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் குறைகிறது.

*  1 வருடத்தில் இதய நோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது. 

*   5 வருடங்களில் பக்கவாதம் வருவதற்கான ஆபத்துகள் குறைகின்றன. 

* 10 ஆண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து பாதியாகக் குறைகிறது. வாய், தொண்டை, சிறுநீர்பை புற்றுநோய், கணைய நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் குறைகிறது. 

* 15 ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான ஆபத்து முற்றிலும் குறைகிறது. 

புகைபிடிப்பது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், புகைபிடிப்பதை நிறுத்தினால் ஏற்படும் நன்மைகள்

* 30 வயதில் புகைபிடிப்பதை நிறுத்தினால் 10 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 

* 40  வயதில் நிறுத்தினால் 9 வருடங்கள் உயிர் வாழலாம். 

*  50 வயதில் நிறுத்தினால் 6 வருடங்கள் உயிர் வாழலாம். 

* 60  வயதில் நிறுத்தினால் 3 வருடங்கள் வரை உயிர் வாழலாம். 

* மாரடைப்பு வந்தவர் புகைபிடிப்பதை நிறுத்தினால், இன்னொரு முறை மாரடைப்பு வருதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதமாக குறைகிறது. 

மற்ற நன்மைகள்

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. 

இன்றே புகைப்பதை நிறுத்திப்பாருங்கள், உங்கள் உடலிலும் இத்தகைய மாற்றங்களை கண்டு நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.

Show More

Leave a Reply

Related Articles