இந்தியாசெய்திகள்

கொரோனாவில் இருந்து 85 ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர்

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து 85 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்

 

உத்தரபிரதேசத்தில் தொழிற்சங்கங்களுடன் இணைந்து உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்றை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்காக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பாராட்டினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்த கொரோனா தொற்று காலத்தை தனக்கு பணி செய்வதற்கான வாய்ப்பாக யோகி ஆதித்யநாத் உருவாக்கி இருக்கிறார். ஆனால் 2017-ம் ஆண்டுக்கு முந்தைய அரசுகளாக இருந்தால் இதை தவிர்த்திருப்பார்கள். 2017-ம் ஆண்டுக்கு முன்பு பா.ஜனதா அல்லாத அரசுகளே மாநிலத்தை ஆண்டன.

இது போன்ற நெருக்கடியான சூழலை எந்த அரசோ, அமைப்பாக இருந்தாலும் தவிர்த்து இருப்பார்கள். ஆனால் இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் ஆதித்யநாத் பணி செய்தார்.

உத்தரபிரதேசத்தின் 24 கோடி மக்கள் தொகை ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை ஆகும். வளர்ந்த நாடுகளான இந்த நாடுகளில் 1.30 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதைப்போல அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திய இழப்புகளை நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். எல்லா வசதிகளும் கொண்ட அமெரிக்காவில் கூட 1.25 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

ஆனால் உத்தரபிரதேசத்தில் வெறும் 600 பேர்தான் பலியாகி இருக்கின்றனர். இது மிகப்பெரும் சாதனை ஆகும். யோகிஜியும், அவரது குழுவினரும் சரியான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் இன்று 85 ஆயிரம் பேராவது பலியாகி இருப்பார்கள். உத்தரபிரதேச அரசின் கடின உழைப்பு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த நெருக்கடி நேரத்தில் துணிச்சலாக செயல்பட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். உங்கள் உழைப்பு உலகுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பின்னர் மாநிலத்தின் 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராம மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், ‘யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால் நூற்றுக்கணக்கான ஷ்ராமிக் ரெயில்கள் மூலம் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுமார் 35 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். அவர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்காமல் மாநிலத்துக்காக உழைத்து வருகிறார். இது அவரது அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு ஆகும்’ என்று கூறினார்.

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles