எடப்பாடி பழனிசாமி 200 நாட்கள் கோவையில் தங்கி பிரசாரம் செய்தாலும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியாது:கொங்கு ஈ.ஆர்.ஈஸ்வரன்

                                                         ஈ.ஆர். ஈஸ்வரன்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் கோவையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை மாநகரில் பல இடங்களில் மேம்பால பணிகள் மந்தமாக நடைபெறுகிறது. மழை நீர் வடிகால் வசதி சரியில்லை. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 200 நாட்கள் கோவையில் தங்கி பிரசாரம் செய்தாலும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்த முடியாது. ஏனென்றால் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். சி.பி.ஐ. தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை என்பது தி.மு.க.விற்கும் உள்ளது என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலினே கூறியுள்ளார். இது தொடர்பான பொய் பிரசாரங்கள் மக்களிடம் எடுபடாது.
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளது. அவர்களுக்கு அளிக்கும் ஆதரவு இனியும் தொடரும்.
கொரோனா தடுப்பூசி பரிசோதனை முழுமையாக முடிந்த பிறகே அதை செலுத்த வேண்டும். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்த நிலையில் குறைவானவர்களே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். முதலில் அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பது அரசின் கடமை.