செய்திகள்தமிழகம்

ஊரடங்கு நீடிக்குமா? 29 ஆம் தேதி முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசனை!

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1-ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது.

இதையடுத்து, இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த 19-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைபோல், பாதிப்பு அதிகமுள்ள மதுரை, தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் கடந்த 24-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்ததுவது தொடர்பாகவும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்துவதை முதல்வர் பழனிசாமி வழக்கமாக வைத்துள்ளார். இதன்படி, வரும் 29-ம் தேதி (திங்கள்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தொடர்பான மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

Cm News 26.06.2020
Cm News 26.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles