செய்திகள்தமிழகம்

ஈழத்தமிழர்கள் உணர்வுக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்

இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துவிடக்கூடாது- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மு.க. ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றத்துக்குப் பொறுப்பான இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி லண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அம்பிகையின் உணர்வுக்கும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் உணர்வுக்கும், ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களுக்கு இருக்கும் உணர்வுக்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்.

இதே கோரிக்கையை இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக, ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்வைத்திருக்கின்றன. தி.மு.க. சார்பில் அந்தக் கோரிக்கைகளை ஆதரித்து பிரதமருக்குக் கடந்த ஜனவரி மாதத்திலேயே கடிதம் எழுதி, அதில் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெறவிருக்கின்ற இந்தத் தருணத்தில், ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும், இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும், அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொள்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும் எனவும், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

Show More

Leave a Reply

Related Articles