நமது மாவட்டம்சின்ன சேலம்

ஆங்கில மருத்துவம் பார்த்ததாக ‘சாப்பாட்டு ராமன்’ மீது வழக்கு பதிவு

‘சாப்பாட்டு ராமன்’ என்ற, ‘யுடியூப்’ நிகழ்ச்சியில் பிரபலமான சித்த மருத்துவர், ஆங்கில மருத்துவம் பார்த்ததால், போலீசாரிடம் சிக்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்செழியன், 60. இவர் கேரளாவில் சித்த மருத்துவம் படித்துள்ளார். கூகையூர் மெயின் ரோடு பகுதியில், அய்யப்பா என்ற பெயரில் கிளினிக் துவங்கி, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்த புகாரின்படி, 26ம் தேதி இரவு, சுகாதார துறையினர் கிளினிக்கிற்கு சென்று, ஆய்வு செய்தனர்.

அப்போது, ஆங்கில மருத்துவம் பார்ப்பதற்கு உண்டான எந்தவொரு சான்றிதழும் அவரிடம் இல்லாததால், கிளினிக்கிற்கு, ‘சீல்’ வைத்து, பொற்செழியன் மீது போலீசில் புகார் அளித்தனர். கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.பொற்செழியன் தரப்பில், அவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதய நோய் பாதிப்பும் உள்ளதாக கூறி, ஜாமின் கோரினர்.

இதையடுத்து, நீதிமன்றம் சொந்த ஜாமினில் பொற்செழியனை விடுவித்தது. பொற்செழியன், ‘சாப்பாட்டு ராமன்’ என்ற யுடியூப் சேனல் மூலம் பிரபலமானார். குறைந்த நேரத்தில், 3 – 5 கிலோ வரை சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிடும் இவருக்கு என, தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.’சாப்பாட்டு சேலஞ்ச்’ என்று 150க்கும் மேற்பட்ட வீடியோக்களை, ‘அப்லோடு’ செய்துள்ளார். இவற்றை, 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Show More

Leave a Reply

Related Articles